திமுக கேபினட் கலாட்டா: துரைமுருகனுக்கு என்ன வருத்தம்?

ஸ்டாலின் தயாரிக்கும் அமைச்சரவை பட்டியல் குறித்து துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில் அக்கட்சியினர் உற்சாகமாக காணப்படுகின்றனர்.

திமுக தலைமையோ வெற்றி பெற்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. திமுக ஆட்சியமைந்தால் அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும், முக்கியத் துறைகளில் எந்த அதிகாரிகளை நியமிக்கலாம் என்பது குறித்த பட்டியலை மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரிடமும் ஸ்டாலின் கலந்தாலோசித்துள்ளார். ஆனால் இறுதிப்பட்டியல் ஸ்டாலின் கையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் யார் யார் பெயர்கள் இருக்கிறது என்பதை அறிய கட்சியின் முக்கியப் புள்ளிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கட்சியில் தலைவர் பதவிக்கு சமமாக பலம் வாய்ந்தாக கருதப்படுவது பொதுச் செயலாளர் பதவி. ஆனால் முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்ச்சியால் உடல் நலிவுற்றிருந்த போது அந்த பதவியின் அதிகாரங்களில் சில தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனிடம் ஸ்டாலின் ஆலோசிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

முன்னதாக திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பிலும் ஸ்டாலின் இறுதிவரை தனியாகவே முடிவெடுத்தார். தற்போது அமைச்சரவை குறித்து முடிவெடுப்பதில் பொதுச் செயலாளர் என்ற முறையிலும், கலைஞரோடு நெருக்கமாக பழகிய அனுபவம் வாய்ந்த நிர்வாகி என்ற முறையிலும் துரைமுருகனின் ஆலோசனைகளை கேட்காதது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள் காட்பாடி வட்டாரத்தினர்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *